குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கார்மேகம் கலந்துரையாடல்

குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கார்மேகம் கலந்துரையாடினார். அப்போது அவர்களுக்கு ரோஜா பூக்கள் கொடுத்து வரவேற்றார்.

Update: 2022-11-14 20:29 GMT

குழந்தைகள் தின விழா

ஆண்டுதோறும் நவம்பர் 14-ந் தேதி ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலும், அரசு நிர்வாகம் செயல்படும் முறையை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் கார்மேகம் கலந்துரையாடினார். இதற்காக அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

அப்போது, பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் கார்மேகம் ரோஜா பூக்களையும், இனிப்புகளையும் கொடுத்து குழந்தைகள் தினவிழா வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் அவர், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் செயல்படும் முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

கலெக்டர் கார்மேகம் மாணவர்களிடம் பேசும்போது, 'அரசு பள்ளி மாணவர்களை உலக தரத்திலான சிறந்த மாணவர்களாக உருவாக்கிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கல்வியில் கடின உழைப்பும், விடாமுயற்சியும் தேவை. அப்போது தான் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம்' என்றார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இதைத்தொடர்ந்து நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை வாங்கினார். பின்னர் அவர் அந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மயில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்