இணையவழி குற்றங்களில் ஈடுபடும் குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்

இணையவழி குற்றங்களில் ஈடுபடும் குழந்தைகளை அதில் இருந்து மீட்டெடுக்க பெற்றோர்கள் அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும் என்று குடிமல்லூர் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி அறிவுரை வழங்கினார்.

Update: 2023-08-15 19:51 GMT

கிராம சபை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் குடிமல்லூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார்.

இந்த கிராமசபை கூட்டத்தில் ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்துக்கான உறுதிமொழி, கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், வீடு கணக்கடுப்பு, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை கணக்கெடுப்பு ஆகியன குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

கூட்டத்தில் பேசிய கலெக்டர் வளர்மதி, வருகிற செப்டம்பர் மாதம் பருவமழை தொடங்குவதற்கு முன்பு ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள கழிவறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும், திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறினார். தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ரத்தசோகை உள்ளிட்ட நோய்கள் தாக்காமல் இருக்க சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் உணவுகளை சாப்பிட வேண்டும்.

இணையவழி குற்றங்கள்

பெற்றோர்கள் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க முயற்சிப்பதோடு அதில் என்ன பயன்படுத்துகிறார்கள்? என்பதை உற்று நோக்க வேண்டும். ஒருவேளை இணைய வழி குற்றங்களில் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், பொறுமையாக எடுத்து கூறி அவர்களுக்கு நம்பிக்கையளித்து அதில் இருந்து மீட்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஊராட்சிகள் துறை உதவி இயக்குனர் குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக்குழுத் தலைவர் வெங்கடரமணன், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், சிவப்பிரகாசம், உட்பட பலதுறைகளை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்