செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் தலைமைச்செயலாளர் ஆய்வு

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார்.;

Update:2023-10-18 14:56 IST

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று காலை தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் சென்று முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தயாரிக்கும் கூடத்தை நேரில் பார்வையிட்டார்.

அப்போது காலை உணவு சாப்பிட்டு கொண்டிருந்த மாணவர்கள் அருகில் திடீரென தலைமைச்செயலாளர் தரையில் அமர்ந்தபடி சாப்பாடு எப்படி இருக்கிறது? தினமும் சாப்பிடுகிறீர்களா என்று கேட்டார். இதையடுத்து தொடக்க பள்ளி, உயர்நிலைப்பள்ளியில் உள்ள வகுப்பறைகளுக்கு நேரில் சென்ற தலைமைச்செயலாளர் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

அப்போது மாணவர்களிடம் நீங்கள் பள்ளியில் சாப்பிடுகிறீர்களா? இல்லை வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு வருவீர்களா? என்று கேட்டார் அதற்கு மாணவர்கள் ஒரு சிலர் நாங்கள் வீட்டில் சாப்பிடுகிறோம் என்றும், ஒரு சிலர் நாங்கள் பள்ளிக்கு வந்து சாப்பிடுகிறோம் என்று தெரிவித்தனர். அப்போது மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்களை பாடம் எடுக்கச்சொல்லி அதனை உன்னிப்பாக தலைமைச்செயலாளர் கவனித்தார்.

தொடக்கப் பள்ளி வகுப்பறையில் இருந்த மாணவர்களை தலைமைச் செயலாளர் அழைத்து காய்கறி மற்றும் பழங்களின் புகைப்படத்தை காண்பித்து அதனுடைய பெயர்களை கேட்டறிந்தார். தொடர்ச்சியாக பள்ளி கழிவறை, அங்கன்வாடி மையம், விளையாடும் மைதானம், பள்ளி வளாகம் உள்பட பள்ளியில் உள்ள அனைத்து இடங்களையும் தலைமைச் செயலாளர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தலைமைச் செயலாளருடன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இந்து பாலா, பள்ளி கல்வித்துறை அரசு செயலாளர் குமரகுருபரன் மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கஜலட்சுமி சண்முகம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுமதி லோகநாதன், ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆசிரியர்கள், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் கொளப்பாக்கத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு செய்தார். இதில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றித்திற்குட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் கீழ்மட்ட கால்வாய் பணிகளை தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வல்லம் ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதிய உணவு திட்டத்தை ஆய்வு மேற்கொண்டு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையத்தையும் பார்வையிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது மாத்தூர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் இது குறித்த மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோரின் அதிகாரங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்ததாகவும் ஆனால் மாவட்ட நிர்வாகம் இது குறித்து எந்த ஒரு மேல் விசாரணையும் நடத்தாமல் உள்ளது.

இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். தங்கள் வார்டுகளில் எந்த அடிப்படை பணிகளும் நடைபெறுவதில்லை. இது குறித்து அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை எனவும் தெரிவித்தனர். குறிப்பாக பெண் வார்டு உறுப்பினர்கள் என்பதால் எங்களை யாரும் மதிப்பதில்லை என புகார் தெரிவித்து மனு அளித்தனர். புகாரை கேட்டறிந்து மனுவை பெற்று கொண்ட தலைமை செயலாளர் இது குறித்து மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை செய்வார் என வார்டு கவுன்சிலர்களிடம் தெரிவித்தார். ஆய்வு மேற்கொள்ள வந்த தலைமைச் செயலாளரிடம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் புகார் அளித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்