பள்ளிகள், மண்டல அலுவலகங்களில் முதல்-அமைச்சரின் படத்தை வைக்கலாம் -மேயர் பிரியா அனுமதி

பள்ளிகளிலும், மண்டல அலுவலகங்களிலும் முதல்-அமைச்சரின் படத்தை வைக்கலாம் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.

Update: 2023-06-30 22:16 GMT

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூன் மாதத்துக்கான மாதாந்திர மன்ற கூட்டம், ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மேயர் பிரியா பதில் அளித்து பேசினார்.

அதன் விவரம் வருமாறு:-

விமலா (வார்டு 41):- பெண் கவுன்சிலர்கள் ஏராளமானோர் இங்கு தாய்மை அடைந்துள்ளனர். பலரும் தங்களுடைய குழந்தைகளை வெளியே நிறுத்திவிட்டு கூட்டத்துக்கு வருகிறார்கள். எனவே, அவர்களுக்கு பயன்படும் வகையில் 2-வது தளத்தில் ஒரு அறையை ஏற்படுத்தி தரவேண்டும்.

மேயர் பிரியா:- கண்டிப்பாக அதற்குரிய சாத்தியக்கூறுகள் பார்க்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ம.தி.மு.க. கவுன்சிலர் சுப்பிரமணி (வார்டு 139 :- மாநகராட்சி மன்றத்தில் முதல்-அமைச்சர் புகைப்படத்தை வைத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோல மாநகராட்சி உதவி பொறியாளர், மண்டல அலுவலர், அனைத்து அதிகாரி அலுவலகங்களிலும் முதல்-அமைச்சரின் படத்தை வைக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் அலுவலகங்களிலும் முதல்-அமைச்சர் படத்தை வைக்க வேண்டும். கவர்னர் ஆர்.என்.ரவி. அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், மரபுகளையும் மீறி வருகிறார். எனவே, மன்ற கூட்டத்தில் கவர்னருக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

முதல்-அமைச்சரின் படம்

மேயர் பிரியா:- பள்ளிகளிலும், மண்டல அலுவலகங்களிலும் முதல்-அமைச்சரின் படத்தை வைக்கலாம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

வி.சி.க. கவுன்சிலர் அம்பேத்வளவன் (வார்டு 73):- ம.தி.மு.க. கவுன்சிலர் சுப்பிரமணி கொண்டுவந்த தீர்மானத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி முழு மனதோடு ஆதரவு அளிக்கிறது.

கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன்:- உள்ளாட்சி அமைப்பில் நமக்கென்று சில அரசியல் சட்டங்கள் உள்ளது. உங்களுடைய கருத்துகளை சட்டப்பூர்வமாக இங்கே அமல்படுத்த முடியாது.

நொளம்பூர் ராஜன் (மண்டல குழு தலைவர்):- சென்னையில் உள்ள மால்களில் பார்க்கிங் கட்டணம் முதல் ஒரு மணி நேரத்துக்கு ரூ.40, பின்னர் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ.30 வசூல் செய்கின்றனர். இதன் மூலம் 10 காருக்கு ஒரு நாளைக்கு ரூ.7 ஆயிரத்து 300-ம், மாதம் ரூ.2 லட்சத்து 19 ஆயிரமும் வசூல் செய்கின்றனர். மால்களில் உள்ள பார்க்கிங் கட்டணத்தை வரைமுறை செய்ய நடவடிக்கை தேவை.

அம்மா உணவகத்தில் அதீத செலவு

கூட்டத்தில் நிலைக்குழு தலைவர் தனசேகரன் பேசியதாவது:-

அம்மா உணவகங்களை பொறுத்தவரை, மண்டலம் 9-ல் 2020-21-ம் நிதியாண்டில் 38 அம்மா உணவகங்களில் மொத்த வரவு ரூ.1 கோடியே 55 லட்சம் ஆகும். ஆனால், இதற்கான மொத்த செலவு ரூ.9 கோடியே 54 லட்சம் ஆகும். இதில், அரிசி, காய்கறி, மளிகை பொருட்களுக்கு ரூ.4 கோடியே 62 லட்சமும், ஊழியர்களுக்கு தினக்கூலி ரூ.4 கோடியே 91 லட்சம் ஆகும். வருவாயை விட ரூ.7 கோடியே 99 லட்சம் அதீத செலவு ஏற்பட்டுள்ளது. இந்த அதீத செலவீனத்தை முழுமையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்