"முதல்-அமைச்சர் கனிவாகவும் இருப்பார், இரும்பாகவும் இருப்பார்" - அமைச்சர் சேகர் பாபு
திராவிட மாடல் ஆட்சி என்பதை தினந்தோறும் நிரூபித்து வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போது, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கையில் அவர் கூறியதாவது;-
"இது திராவிட மாடல் ஆட்சி என்பதை நாங்கள் தினந்தோறும் நிரூபித்து வருகிறோம். நேற்றைய தினம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ரூ.300 கோடி செலவில் திருப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இது தான் திராவிட மாடல்.
இனத்தால், மதத்தால், மொழியால் கலகத்தை உருவாக்கி பிரச்சினைகளை ஏற்படுத்துவது திராவிட மாடல் அல்ல. உண்மையான திராவிட மாடல் ஆட்சியை வழங்குவதற்காக முதல்-அமைச்சர் கனிவாகவும் இருப்பார், இரும்பாகவும் இருப்பார்."
இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.