பெங்களூரு சென்ற முதல்-அமைச்சர் மேகதாது அணைகட்ட முயற்சிக்கும் காங்கிரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?: சசிகலா புஷ்பா கேள்வி

பெங்களூரு சென்ற முதல்-அமைச்சர் மேகதாது அணைகட்ட முயற்சிக்கும் காங்கிரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என்று பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2023-07-18 18:45 GMT

தூத்துக்குடியில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான சசிகலா புஷ்பா நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி நீரை தமிழக விவசாயிகள் எதிர்நோக்கி இருக்கும் நிலையில், மேகதாது அணைகட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறிவருகிறார். ஆனால் பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்று, அவர்களுடன் கைகோர்த்து இருப்பது, தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். இந்த கூட்டத்தில் மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் காங்கிரசுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அவர் அதை செய்யவில்லை. கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருக்கும்போது இந்த அணை கட்டும் முயற்சி செய்யவில்லை.

பா. ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஏற்கனவே தி.மு.க.தலைவர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ளார். அடுத்ததாக அவர் நடைபயணம் மேற்கொள்ளும் போது 2-வது பட்டியலை வெளியிடுவார். தமிழகத்தில் அமலாக்கத்துறையினர் தங்கள் கடமையை செய்து வருகின்றனர். இதில் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை எதுவும் கிடையாது' என்றார்.

பேட்டியின்போது பா.ஜ.க. தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், மாவட்டபொதுச்செயலர் உமரி சத்திய சீலன், மாவட்ட துணைத் தலைவர்கள் சிவராமன், சுவைதார், தங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து உள்பட பலர் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்