'பெருமை கொள்கிறேன்' பழங்குடியின பெண் நீதிபதி ஸ்ரீபதிக்கு முதல் அமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில் என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.;
சென்னை,
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை அடுத்த புலியூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் பழங்குடியின பெண் ஸ்ரீபதி வயது (22). இவர் ஏலகிரி மலையில் உள்ள பள்ளியில் கல்வி கற்று பின்னர் அப்பகுதியில் பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பு படித்தார். படித்துக்கொண்டிருக்கும்போதே ஸ்ரீபதிக்கு திருமணம் ஆகியுள்ளது. மேலும் இவருக்கு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வுக்கு தயாராகி வந்த ஸ்ரீபதி பிரசவ தேதியும், தேர்வு தேதியும் ஒரே நாளில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு தேர்வுக்கு முந்தைய நாளே ஸ்ரீபதிக்கு பிரசவமாகி குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு குழந்தை பிறந்தாலும், தேர்வு எழுதுவதில் ஸ்ரீபதி உறுதியாக இருந்துள்ளார். மேலும் ஸ்ரீபதியின் கணவர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் பிரசவம் ஆன 2-வது நாளில் காரில் பயணம் செய்து சிவில் நீதிபதி தேர்வு எழுதியுள்ளார். தற்போது வெளியான டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு முடிவில் ஸ்ரீபதி சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். இதன்மூலம் ஜவ்வாது மலையில் 22 வயதில் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ள பழங்குடியின பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், பெண் நீதிபதி ஸ்ரீபதிக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்! பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
அதுவும் நமது #DravidianModel அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்! சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்!
"நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, - நல்ல
நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி!
பெற்றநல் தந்தைதாய் மாரே, - நும்
பெண்களைக் கற்கவைப் பீரே!
இற்றைநாள் பெண்கல்வி யாலே, - முன்
னேறவேண் டும்வைய மேலே!"
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.