விராலிமலை பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவருக்கும் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2024-05-20 14:07 GMT

கோப்புப்படம் 

சென்னை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், வானதிராயன்பட்டி கிராமம், அத்திப்பள்ளம் என்ற இடத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கிடங்கில் இன்று (20.5.2024) பிற்பகல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், அத்திப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்ராஜா (வயது 27) த/பெ.சுப்ரமணியன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிவநேசன் (வயது 27) த/பெ.பால்ராஜ் என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், காயமடைந்து பாதிக்கப்பட்டவருக்கும் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்