முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மவுனம் ஆபத்தானது: கண்ணகி கோவில் வழிபாடு தேதியை கேரள அரசு அறிவித்தது ஏன்? -முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி
கண்ணகி கோவில் வழிபாடு தேதியை கேரள அரசு அறிவித்தது ஏன் என்றும், இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் மவுனம் ஆபத்தானது என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.;
கண்ணகி கோவில் வழிபாடு தேதியை கேரள அரசு அறிவித்தது ஏன் என்றும், இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் மவுனம் ஆபத்தானது என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
புதிய அட்டை
மதுரை அ.தி.மு.க. புறநகர் மேற்கு மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் உள்ள செல்லம்பட்டி ஒன்றியத்தில், புதிய உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம்.வி.பி.ராஜா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீதிபதி, தவசி, மாநில பேரவை துணைச்செயலாளர் துரை தனராஜன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, உசிலம்பட்டி நகர் செயலாளர் பூமா ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், இளைஞரணி இணைச் செயலாளர் ஏ.கே பி.சிவசுப்பிரமணியன், மாவட்ட மாணவரணி செயலாளர் மகேந்திர பாண்டியன், கூட்டுறவு சங்க தலைவர் ரகு, செல்லம்பட்டி ஒன்றிய அவைத்தலைவர் பண்பாளன், பொதுக்குழு உறுப்பினர் பரமன், வாலாந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கணபதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமைதி உள்பட பலர் கலந்து கொண்டனர். புதிய அட்டையை, சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி பேசினார்.
தன்மானமுள்ள தொண்டர்கள்
அப்போது அவர் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு பதிவு செய்தால், நாங்கள் கைகளை கட்டிக் கொண்டு மவுன விரதம் இருக்க மாட்டோம். தி.மு.க. அரசை எதிர்க்கவும் எந்த தியாகத்தையும் செய்வோம். அதை தான் நான் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூறினேன். ஆனால் அதற்கும் என் மீது தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளனர். அதற்கு எல்லாம் நாங்கள் அஞ்ச போவதில்லை. எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் என் மீது போட்டுக் கொள்ளுங்கள். சிறையில் அடைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
சித்ரா பவுர்ணமி
மதுரையில் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது எல்லாம், அண்டை மாநிலத்தவர்களிடம் தமிழர்கள் உரிமையை இழந்து விடுவோம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 142 அடி நீர்மட்டத்தை உயர்த்தினோம். ஆனால் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின், அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டவில்லை. தமிழக-கேரளா எல்லை அருகே உள்ள விண்ணேற்றி பாறை மலை உச்சியில் மங்களதேவி கண்ணகி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுத்தோறும் சித்ரா பவுர்ணமியன்று தமிழர்கள் வழிபாடு நடத்துவார்கள். அதற்கான தேதியை தமிழக அரசு தான் அறிவிக்கும். ஆனால் இந்தாண்டு, கேரள அரசு வழிபாடு தேதியை அறிவித்து உள்ளது. இந்த கோவில் தமிழகத்தில் இருந்தபோதிலும், அதனை கேரள அரசு சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த கோவில் வழிபாடு நம்முடைய உரிமை. சித்ரா பவுர்ணமி மே மாதம் 5-ந் தேதி வருகிறது. ஆனால் கேரள அரசு 6-ந் தேதி தான் திருவிழா கொண்டாடப்படும் என்று அறிவித்து இருப்பது உள்நோக்கம் கொண்டது. கேரளாவின் இந்த அநீதிகளை எல்லாம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தட்டி கேட்காமல் மவுனமாக இருப்பது ஆபத்தை விளைவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.