சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார்

சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார். அப்போது அவர், 55 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.

Update: 2023-08-16 00:27 GMT

சென்னை,

இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

சுதந்திர தின விழா

கோலாகலமாக நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து நேற்று காலை 8.40 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.

மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்தபோது அவரை காரின் முன்னாலும், பின்னாலும் சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர்.

மரபுப்படி அறிமுகம்

கோட்டை கொத்தளத்தின் முன்பாக இருக்கும் அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 8.49 மணிக்கு வந்திறங்கினார். அவரை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். பின்னர் அங்கிருந்த தென்னிந்திய பகுதிகளின் ராணுவ தலைமையக படைத்தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீர் சிங் பிரார், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் ரவிக்குமார் திங்ரா, தாம்பரம் விமானப்படை தள அதிகாரி ஏர் கமாண்டர் ரத்திஷ்குமார், கிழக்கு மண்டல கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆனந்த் பிரகாஷ், தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) அருண் ஆகியோரை மரபுப்படி முதல்-அமைச்சருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.

அணிவகுப்பு மரியாதை

பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதல்-அமைச்சரை தலைமைச் செயலாளர் அழைத்துச் சென்றார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து மு.க. ஸ்டாலின், திறந்த ஜீப்பில் ஏறிச்சென்று, போலீஸ் அணிவகுப்பை பார்வையிட்டார்.

சுதந்திர தின உரை

அதனைத்தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில், புதுப்பிக்கப்பட்ட கொடி கம்பத்தில் மூவர்ண தேசியக்கொடியை முதல்-அமைச்சர் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது கொடிக்குள் வைக்கப்பட்டு இருந்த பூக்கள் காற்றில் பறந்து வந்து விழுந்தன. மூவர்ணத்தில் பலூன்களும் பறக்கவிடப்பட்டன.

தேசியக்கொடி ஏற்றப்பட்டபோது போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். அனைவரும் எழுந்து நின்றனர். அதைத்தொடர்ந்து சுதந்திர தின உரையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்தபடி நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஓய்வூதியம் உயர்வு

இந்திய விடுதலை போராட்ட வீரர்கள் 195 பேருக்கு மாதந்தோறும் தியாகிகளுக்கான நிதி கொடையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு தியாகிகளுக்கானஓய்வூதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது. விடுதலை போராட்ட வீரர்களின் வழித்தோன்றல்களுக்கு தொடர்ந்து உதவிகளை அரசு செய்து வருகிறது.

விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.11 ஆயிரமாக இனி உயர்த்தி வழங்கப்படும்.

55 ஆயிரம் பணியிடங்கள்

ஆட்சி சக்கரம் சுழல்வதற்கு அரசு ஊழியர்களே காரணம். அந்த சக்கரம் வேகமாக சுழல்வதும், மெதுவாக சுழல்வதும் அரசு ஊழியர்களின் கைகளில்தான் உள்ளது. அந்த கைகள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். எனவே நடப்பாண்டுகளில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம்.

எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் அரசின் சமூகநீதி நிர்வாக ஆட்சி முறை இந்தியா முழுமைக்கு பரவுமானால், அதைவிட மகிழ்ச்சியான செய்தி எதுவும் இருக்க முடியாது.

இவ்வாறு முதல்-அமைச்சர் பேசினார்.

புதிய பதக்கம்

அதன் பின்னர் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருது போன்ற பல விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றை உரியவர்களுக்கு கோட்டை கொத்தளத்தில் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த ஆண்டு புதிய பதக்கமாக போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்காக போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழக முதல்-அமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

தகைசால் தமிழர் விருது

தகைசால் தமிழர் விருது திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுக்கான பரிசு தொகை ரூ.10 லட்சமாகும். பின்னர் விருது பெற்றவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதைத்தொடர்ந்து கோட்டை கொத்தளத்திற்கு அருகே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முதல்-அமைச்சர் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார்.

சுதந்திர தின விழாவை காண பல தரப்பினரும் கோட்டை அருகே ஆர்வத்துடன் வந்து குவிந்தனர். அவர்களுக்காக அங்குள்ள சாலையின் ஓரத்தில் தடுப்பு போடப்பட்டு இருந்தது. காலை 10.10 மணிக்கு விழா முடிந்ததும், பொதுமக்களுக்கு முதல்-அமைச்சர் சுதந்திர தின வாழ்த்துகளை கையசைத்து தெரிவித்தபடி சென்றார்.

விழாவில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள், தியாகிகளின் குடும்பத்தினர், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்