கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு, வளர்ச்சி பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆய்வு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு, வளர்ச்சி பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்கிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-04-24 18:45 GMT

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளையும் (புதன்கிழமை), நாளை மறுநாளும் (வியாழக்கிழமை) விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களின் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு குறித்தும், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.

இதற்காக அவர், நாளை சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு மாலை 4 மணிக்கு விழுப்புரம் வருகை தருகிறார். விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அவர், விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மற்றும் 3 மாவட்டங்களின் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருடன் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து ஆய்வு செய்து சட்டம்- ஒழுங்கு பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்குகிறார்.

வளர்ச்சி பணிகள் ஆய்வு

அதன் பின்னர் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு 3 மாவட்ட அரசுத்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிவதோடு பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்குகிறார்.

விழுப்புரத்திற்கு முதல்-அமைச்சர் வருகையையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசின் அனைத்துத்துறை அலுவலகங்களும் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. அதேபோல் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சாலைகளும் புதிதாக போடப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன.

பலத்த பாதுகாப்பு

இந்நிலையில் முதல்-அமைச்சரின் கள ஆய்வையொட்டி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஶ்ரீநாதா உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான வெடிகுண்டு நிபுணர்கள் நேற்று மாலை மோப்ப நாய் உதவியுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முழுவதும் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்