சாலை, மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சாலை, மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2023-07-03 08:09 GMT

சென்னை,

சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை, சாலைகள் மற்றும் பாலங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் இன்று காலை நடைபெற்றது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள், சாலை பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் எந்த அளவுக்கு முடிவடைந்து உள்ளது. இன்னும் எவ்வளவு பணிகள் நடைபெறாமல் நிலுவையில் உள்ளது என்பது பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி ஆகிய 5 அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட துறை செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழக மக்களின் நலனை முன்னிறுத்தி மட்டுமே 2 ஆண்டுகளாக வளர்ச்சி திட்டங்களை அரசு செய்து வருகிறது. செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். தொடர்ச்சியான ஆய்வுகளே தொய்வில்லாத நடவடிக்கைக்கு வித்திடும் என்பதன்படி செயல்படுகிறோம்.

சாலை, மேம்பால பணிகளால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலைப்பணிகளில் தேவையற்ற தாமதத்தை தவிர்த்து உரிய காலத்தில் பணிகளை முடிக்க வேண்டும். நிலுவையில் உள்ள சாலை, மேம்பால பணிகளை பருவமழைக்கு முன் நிறைவேற்ற வேண்டும். சென்னை சாலைகள் இயற்கை பேரிடரை தாங்கும் அளவிற்கு சரி செய்யப்பட்டுள்ளன. துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்ச்சியான ஆய்வுகளே இதற்கு காரணம்.

நெரிசலால் மக்கள் பாதிக்கப்படுவதால் சாலை, மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தமிழகத்தில் 2 ஆண்டுகளில் தொழில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. சென்னையில் உள்ள பாலங்கள் திமுக அரசின் பெயரை சொல்லக்கூடிய வகையில் உள்ளன. எந்த மழையையும் தாங்கும் அளவிற்கு சென்னை சாலைகள் மாறியுள்ளன. சாலைகள், மேம்பால பணிகளை முடிப்பதற்கு போதுமான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; நிதி ஒரு தடையில்லை. மாநில வளர்ச்சிக்கு சீரான சாலைகளும், மேம்பாலங்களும் அடிப்படை தேவையாக உள்ளன. சாலைகள் சீராக உள்ளதற்கு ஆய்வு கூட்டங்கள் தான் காரணமாக உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்