சென்னையில் 100 பள்ளிகளில் சிற்பி எனும் புதிய திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை கொண்டு இந்த சிற்பி திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.;

Update: 2022-09-14 01:46 GMT

சென்னை,

சிறார் குற்றசெயல்களுக்கு தீர்வு காணும் வகையில் சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் 'சிற்பி' என்னும் புதிய திட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னையில் பெருகி வரும் குற்றச்செயல்களை தடுக்க மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக சிறார்களை நல்வழிப்படுத்துவதற்கான புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் சிறார் குற்ற செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டவும் சென்னையில் 'சிற்பி' திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை கொண்டு இந்த சிற்பி திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

பள்ளிகளில் செயல்படும் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) போல் காவல் துறையினரின் நிகழ்ச்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 8-ம் வகுப்பு முதல், மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கென தனி சீருடையும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லுதல், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களின் திறன்களை மேம்படுத்துதல், சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக அவர்களை மாற்றும் வகையில், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து சட்ட கல்வியறிவு பெறச் செய்தல் போன்றவையும் இத்திட்டத்தில் அடங்கும்.

இதுதவிர, காவல் கட்டுப்பாட்டு அறை அவசர எண், காவலன் செயலி, முதியோர் உதவி எண், காவல் கரங்கள் உள்ளிட்ட அவசரகால எண்கள் குறித்து மாணவர்களுக்கு அறிவூட்டுவதுடன், அவர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்