ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் ஸ்டாலின்

காந்தி நினைவு மண்டபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் கொடுத்து பாதயாத்திரையை தொடங்கிவைத்தார்.

Update: 2022-09-07 11:07 GMT

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு ராகுல் காந்தி பாதயாத்திரை செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி வழங்கி இந்த நடைபயணத்தை இன்னும் சற்று நேரத்தில் தொடங்கி வைக்கிறார்.கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பிருந்து பாதயாத்திரை தொடங்குகிறது. நிகழ்ச்சி தொடக்க விழாவில்தமிழ்நாடு, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில முதல்-அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

இதில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி வந்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட எல்லையான காவல்கிணறில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை, கட்டியணைத்து வரவேற்றமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் ராகுல் காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காந்தி நினைவு மண்டபத்தில் முதல்-அமைச்சர் மு,க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் கொடுத்து பாதயாத்திரையை தொடங்கிவைத்தார்.

முன்னதாக இன்று காலை தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தன் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்குச் சென்றார். நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்த ராகுல் அங்கு மரக்கன்று ஒன்றையும் வைத்தார்.

மதியம் கன்னியாகுமரி வந்தார். நடைபயணத்தை தொடங்குவதற்கு முன்னர், அங்கு அவர் பூம்புகார் படகுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம், ராமகிருஷ்ண பரமஹம்சர் சிலை மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார்.

தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரை மூலம் ராகுல்காந்தி 3,570 கி.மீ. தூரத்தை நடந்தே சென்று காஷ்மீரை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அகில இந்திய நிர்வாகிகள், அந்தந்த மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் ராகுல்காந்தியுடன் செல்கிறார்கள்.

இந்த பயணத்தின்போது ராகுல் காந்தியோ, கட்சியின் மூத்த தலைவர்களோ எந்தவொரு நட்சத்திர விடுதிகளிலும் தங்கவில்லை. மிகவும் எளிமையான நடைப்பயணமாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைப்பயணம் செல்பவா்கள் தங்குவதற்காக 60 கண்டெய்னர்கள்கேரவன் வேன்களாக தயாரிக்கப்பட்டு குமரிக்கு ஏற்கெனவே அனுபப்பட்டுவிட்டது. இதில், ராகுல் காந்தி தனி கண்டெய்னரிலும், மீதமுள்ள 118 நிர்வாகிகள் இதர கண்டெய்னரிலும் தங்கவுள்ளனர்.

இவர்களுக்கான உணவும் கண்டெய்னரில்தான் தயாரிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு கண்டெய்னரிலும் கழிவறை, படுக்கைகள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சில கண்டெய்னரில் குளிர்சாதன வசதிகளும் உள்ளன.

தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை நடைப்பயணம். பிறகு மதிய உணவு இடைவேளை. பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைப்பயணம். இரவு ஓய்வு எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செப். 10 வரை மொத்தம் 56 கி.மீ., கேரளத்தில் 17 நாள்கள், கா்நாடகத்தில் 21 நாள்கள், தெலங்கானாவில் 13 நாள்கள், ஆந்திரத்தில் 3 நாள்கள் என தென்மாநிலங்களில் பயணம் மேற்கொள்ள உள்ளாா்.

வருகின்ற 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் இந்தாண்டு இறுதியில் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த புதிய முயற்சியை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்