முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு
வேலூர் மாவட்டத்தில் நடந்த முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வை 3,167 மாணவர்கள் எழுதினார்கள். தேர்வு மையங்களை முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி ஆய்வு செய்தார்.;
வேலூர் மாவட்டத்தில் நடந்த முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வை 3,167 மாணவர்கள் எழுதினார்கள். தேர்வு மையங்களை முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி ஆய்வு செய்தார்.
திறனாய்வு தேர்வு
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவர்களின் திறனை கண்டறியும் வகையில் ஆண்டுதோறும் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் தேர்ச்சி பெறும் 1,000 மாணவ-மாணவிகளுக்கு இளநிலை பட்டப்படிப்பு முடியும் வரை ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
மாநில பாடத்திட்டத்தில் 9,10-ம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட புத்தகங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு இன்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 3,409 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்கள் தேர்வு எழுத வேலூர் தோட்டப்பாளையம் அரசு பெண்கள் பள்ளி, கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, காட்பாடி அரசு பெண்கள் பள்ளி, அணைக்கட்டு அரசு ஆண்கள் பள்ளி உள்பட 12 பள்ளிகளில் தேர்வு நடந்தது.
3,167 மாணவர்கள் எழுதினர்
முதல் தாள் தேர்வு காலை 10 முதல் மதியம் 12 மணி வரையும், 2-ம் தாள் தேர்வு பிற்பகல் 2 முதல் 4 மணி வரையும் நடந்தது. இதையொட்டி மாணவர்கள் காலை 9 முதல் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் சோதனைக்கு பின்னர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கால்குலேட்டர், செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வை 3,167 மாணவர்கள் எழுதினர். 242 மாணவர்கள் பங்கேற்கவில்லை.
காட்பாடி அரசு பெண்கள் பள்ளி உள்பட பல்வேறு மையத்தில் நடந்த தேர்வை வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.