சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு டவுன் பஸ் இயக்க வேண்டும்
சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் இருந்து சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு டவுன் பஸ் இயக்க வெண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
கொள்ளிடம்:
அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி
சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம், செம்பனார்கோயில், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் மருத்துவ தேவைகளுக்கு பெரும்பாலும் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியையே நாடி உள்ளனர். இந்த நிலையில் மேற்கண்ட பகுதியில் இருந்து ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள், பொதுமக்கள் தங்கள் பகுதியில் இருந்து சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு சென்று, அங்கு நீண்ட நேரம் காத்திருந்து மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதனால் நோயாளிகள், முதியவர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளவர்கள் அவசர சிகிச்சைக்கு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலையே உள்ளது.
டவுன் பஸ்
இந்த நிலையில் இப்பகுதி மக்களின் நலன் கருதி சீர்காழியில் இருந்து கொள்ளிடம் வழியாக சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கும், அங்குள்ள பல் ஆஸ்பத்திரிக்கும் டவுன் பஸ் இயக்க வேண்டும் என்று மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அவ்வாறின்றி மயிலாடுதுறை அல்லது சீர்காழியிலிருந்து சுற்றுலா தலமான பிச்சாவரம் செல்ல புதிய பேருந்து ஒன்றை இயக்கினால் பிச்சாவரம் சுற்றுலாமையத்துக்கு செல்லும் வழியில் உள்ள ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி அருகில் இறங்கி எளிதில் சென்று விட முடியும். இது ஏழை, எளிய கிராமமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் நோயாளிகளின் சிரமம் பெரிதும் குறையும். எனவே மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம் வழியாக சிதம்பரம் அண்ணாமலை நகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.