கோழி தலை, கால்களை மாலையாக அணிந்து ஆர்ப்பாட்டம்

வேடசந்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு கோழி தலை, கால்களை மாலையாக அணிந்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-07-03 16:35 GMT

கோழி தலை, கால்கள்

வேடசந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் 50-க்கும் மேற்பட்ட கோழி இறைச்சி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மீதமாகும் கோழி தலை, கால், குடல்களை வேடசந்தூரில் மாரம்பாடி சாலையில் உள்ள குப்பைக்கிடங்கின் அருகே இறைச்சிக்கடை உரிமையாளர்கள் கொட்டி விட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி இறைச்சி கழிவுகளை தின்னும் நாய்கள் வெறிபிடித்து ஆடு, மாடுகளை கடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே கோழி இறைச்சி கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுவதை கண்டித்து, இந்து மக்கள் கட்சி சார்பில் வேடசந்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட அமைப்பாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னதாக அவர் கோழியின் தலை, கால்களை தனது கழுத்தில் மாலையாக அணிந்து அம்பேத்கர் சிலையில் இருந்து இந்து மக்கள் கட்சியினருடன் கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.

தெருநாய்களுக்கு கருத்தடை

பின்னர் அவர், கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தார். அந்த மனுவில், வேடசந்தூரில் சாலையோரத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டும் கோழிக்கடை உரிமையாளர்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேடசந்தூர் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மணிகண்டன், கிழக்கு மாவட்ட தலைவர் நாகராஜ், மாநில இளைஞரணி செயலாளர் மோகன், வடமதுரை ஒன்றிய செயலாளர் ராஜாராம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்