செஸ் போஸ்டர் : பாஜகவினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா? - கே.எஸ் அழகிரி கேள்வி
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;
தமிழகமே பெருமைப்படத்தக்க வகையில் 44-வது சர்வதேச சதுரங்கப் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தீவிர முயற்சியால் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. 95 ஆண்டுகளாக நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை இந்தியா இதுவரை ஒருமுறை கூட ஏற்று நடத்தியதில்லை.
சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அருகேயுள்ள மாநகர பேருந்து நிறுத்த நிழற்குடையில் செஸ் ஒலம்பியாட் போட்டிக்கான விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது. அதில் மு.க.ஸ்டாலின் படம் இடம் பெற்றிருந்தது. பாஜகவினர் சிலர் இந்த விளம்பரத்தின் மீது பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியிருக்கின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த சில அமைப்பினர் கருப்பு மை கொண்டு மோடி படத்தை அழித்துள்ளனர். இந்த செயலை செய்ததற்காக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
அந்த விளம்பரத்தில் தான் பாஜகவினர் அத்துமீறி பலவந்தமாக பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியிருக்கிறார்கள். இந்த செயலை செய்தவர்களை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை? பாஜகவினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா? ஏதோவொரு வகையில் காவல்துறையினர் பாஜகவினரின் மனதைக் குளிர வைக்கும் வகையில் செயல்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது.
பிரதமர் மோடி மீது தமிழக மக்களுக்கு இருக்கிற வெறுப்பின் வெளிப்பாடாகவே ஆத்திரம் கொண்ட தமிழர்கள் சிலர் பிரதமர் மோடியின் படத்தின் மீது கருப்பு மை பூசியதற்காக கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் மோடி மீதான எதிர்ப்பை மூடி மறைக்க முடியாது. இத்தகைய பாரபட்ச போக்கை தமிழக காவல்துறையினர் கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்