சென்னை: பையில் எடுத்து சென்ற நாட்டு வெடிகுண்டு தவறி விழுந்து வெடித்ததில் ரவுடி படுகாயம்
சென்னையில் பையில் எடுத்து சென்ற நாட்டு வெடிகுண்டு தவறி விழுந்து வெடித்ததில் ரவுடி படுகாயம் அடைந்து உள்ளார்.;
பூந்தமல்லி,
சென்னை மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதில் ஒரு நபர் பேப்பர் பையில் வைத்திருந்த பொருள் ஒன்று கீழே விழுந்ததில் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த சத்தத்தை கேட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது வெடித்து சிதறியது நாட்டு வெடிகுண்டு என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறகையில்,
நாட்டு வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்கள் யார் என விசாரித்தபோது சிறிது தூரத்தில் காலில் பலத்த காயங்களுடன் ஒருவர் படுத்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து அந்த நபரை விசாரித்த போது அய்யப்பன்தாங்கலை சேர்ந்த வினோத்குமார்(27) என்பது தெரியவந்தது. இவர் மீது மாங்காடு, போரூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளது.
வினோத்குமார் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது பேப்பர் பையில் எடுத்து சென்ற நாட்டு வெடிகுண்டு பை கிழிந்து கீழே விழுந்து வெடித்ததில் காயம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பி சென்று உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.