ஒடிசா ரெயில் விபத்தில் காயம் அடைந்த பயணிகளுக்கு உதவிக்கரம்: சென்டிரல் ரெயில் நிலையம், விமான நிலையத்தில் போலீசார் சிறப்பு ஏற்பாடு

ஒடிசா ரெயில் விபத்தில் காயம் அடைந்த தமிழக பயணிகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக சென்னை சென்டிரல் ரெயில் நிலையம், விமான நிலையத்தில் போலீஸ் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-06-03 22:27 GMT

போலீஸ் குழு

ஒடிசா ரெயில் விபத்து தகவல்களை அறிந்துகொள்வதற்காக சென்னை எழிலக வளாகத்தில் பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. இதில் அரசு அதிகாரிகள் குழுவினருடன் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் சென்னை போலீஸ் அதிகாரிகள் குழுவும் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் சிக்கிய ரெயில் பயணிகளுக்கு உதவுவதற்காக சென்னை போலீசார் சார்பில் மேலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

* விபத்துக்கு உள்ளான ரெயிலில் பயணம் செய்த தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களை சேர்ந்த பயணிகள் விமானம் மற்றும் இதர ரெயில்கள் மூலம் சென்னை வருகின்றனர். எனவே சென்னை விமான நிலையம், டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையத்தில் ரெயில்வே (ஆர்.பி.எப்.) மற்றும் தமிழ்நாடு ரெயில்வே போலீஸ்துறையுடன் இணைந்து இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

அதிகாரிகள் செல்போன் எண்

* இந்த ரெயிலில் பயணம் செய்து, சென்னை டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் திரும்பும் பயணிகளுக்கு உதவுவதற்காக சென்னை பூக்கடை துணை கமிஷனர் ஸ்ரேயா குப்தா (செல்போன் எண்- 94982 33333) தலைமையில் பூக்கடை உதவி கமிஷனர் பாலகிருஷ்ணபிரபு (94440 33599) மற்றும் சிறப்பு உதவி மைய வழிகாட்டும் அதிகாரியான பூக்கடை இன்ஸ்பெக்டர் தளவாய்சாமி (98409 76307), போலீஸ் குழுவினர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் தயார் நிலையில் இருப்பார்கள்.

* காயம் அடைந்த பயணிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் (94442 06868), சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி (94981 32395) தலைமையில் போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்டிரல் ரெயில் நிலையத்தில் உதவி தேவைப்படும் பயணிகள் 044-23452454 மற்றும் 94981 00211 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம். மேலும் கட்டுப்பாட்டு அறை எண் 044 25330952 தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 044 23452359, தமிழக போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100, அவசர உதவி எண் 112 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு உதவிகள் பெறலாம். குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.

ஆம்புலன்ஸ் வாகனம்

* ஓடிசாவில் விபத்துக்குள்ளான ரெயிலில் பயணம் செய்த பயணிகள் சென்னை விமான நிலையத்துக்கு வரும்போது அங்குள்ள போலீஸ் சிறப்பு கட்டுப்பாட்டு அறை குழுவினர் மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இதற்காக சென்னை விமான நிலையத்தில் போலீஸ்துறை சார்பில் உதவி எண் 94981 00151 அளிக்கப்பட்டுள்ளது.

* சென்னை விமான நிலையம் திரும்பும் பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், படுகாயம் அடைந்து சென்னை திரும்பியவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவும், அவ்வாறு ஆம்புலன்சு வாகனம் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சிக்னல்களில் பச்சைவிளக்கு வழித்தடத்தில் விரைவாக அழைத்து செல்லவும் போக்குவரத்து போலீஸ் துறை அதிகாரிகள் தலைமையில் போலீஸ் வாகனம் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

* பயணிகள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு டாக்சி மற்றும் ஆட்டோக்களில் எந்த இடையூறும் இல்லாமல் பயணிக்கவும், பயணிகளிடம் இருந்து ஆட்டோ மற்றும் டாக்சிகளில் அதிக கட்டணம் வசூலிக்காததை உறுதி செய்யவும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தலைமையிலான போலீஸ் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உரிய உதவிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட தகவல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்