சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் சேவை நவம்பரில் தொடங்கும்: தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் சேவை வரும் நவம்பரில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-09-04 05:22 GMT

சென்னை,

சென்னை ஐ.சி.எப்-ல் தற்போது வந்தே பாரத் ரெயில்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகின்றது. இங்கு இதுவரை 33 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 26-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. தெற்கு ரெயில்வேயில் சென்னை சென்ட்ரல்-மைசூர், சென்னை சென்ட்ரல்-கோவை, காசர்கோடு-திருவனந்தபுரம் இடையே தலா ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த 3 வந்தே பாரத் ரெயில்களுக்கும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை-திருப்பதி, சென்னை எழும்பூர்-நெல்லை இடையே தலா ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் 31, 32, 33-வது வந்தே பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில், 31-வது வந்தே பாரத் ரெயில் தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆரஞ்சு, சாம்பல் நிறம் கொண்ட இந்த ரெயில் சமீபத்தில்தான் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூர்-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் சேவை நவம்பரில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை சென்ட்ரல்-கூடூர், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், ஜோலார்பேட்டை வழித்தடத்தில் ரெயில்கள் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. இதேபோல தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில் பாதைகளின் மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றன. சென்னை-விழுப்புரம் வழித்தடத்தில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த பாதை மேம்படுத்தப்படுகிறது.

வந்தே பாரத் ரெயில் குறைந்தபட்சம் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட வேண்டும். எனவே குறிப்பிட்ட வழித்தடத்தில் வேகத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இப்பணி விரைவில் முடிந்து விடும்.

இந்த பணி முடிந்த பிறகு சென்னை எழும்பூர்-நெல்லை வந்தே பாரத் ரெயில் சேவை வரும் நவம்பர் மாதத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது. இது தொடர்பான இறுதி முடிவை ரெயில்வே வாரியம் எடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்