'சென்னை-கொல்கத்தா ரெயில் மார்க்கத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்' - மத்திய மந்திரிக்கு கலாநிதி வீராசாமி எம்.பி. கடிதம்

மீட்புக் குழுவினருக்கு தக்க பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதா, என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என கலாநிதி வீராசாமி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-06-07 18:25 GMT

சென்னை,

வடசென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :

"ஒரு இந்தியக் குடிமகனாகவும், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்னும் நிலையிலும் பல உயிர்களை இழந்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்று, துயரமுடன் இருக்கும் இந்த வேளையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் விபத்தினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த பேரிடரால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்திலும் பங்கேற்கின்றேன். இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தாலும் செய்ய தயாராக உள்ளேன்.

வழக்கம் போல, இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, மாநில அரசும், விபத்து ஏற்பட்ட பகுதி வாழ் கிராமங்களும் ஓடோடி வந்து முதலில் உதவிகரங்கள் நீட்டி உள்ளனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு உள்ள சில ரயில் பயனாளிகள் ரயில்வே மீட்பு குழுவினர் தாமதமாக வந்ததாக தெரிவித்து உள்ளனர். இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, விரைந்து செயல்படுவது எப்படி என்று மீட்புக் குழுவினருக்கு, ரெயில்வே துறையின் வழிகாட்டுதல் முறைப்படி, அவர்களுக்கு தக்க பயிற்சிகள் காலமுறைப்படி வழங்கப்பட்டுள்ளதா, என்பதை தாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஒரு வேளை இல்லையெனில், அவர்களுக்கு தக்க பயிற்சிகள் வழங்க ஆணையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை-கொல்கத்தா ரெயில் மார்க்கம் மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் மார்க்கமாகும். அதிக மக்கள் பயணம் செய்வதால், இந்த மார்க்கத்தில் உள்கட்டமைப்பை உடனடியாக வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். மேலும் பயனாளிகள், கோரமண்டல் விரைவு ரயிலில் வருவதால், அதிகப்படியான பயனாளிகள் முன்பதிவு செய்வதாலும், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் அதிகமான அளவில் பயனாளிகள் பயணிப்பதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இந்த மார்க்கத்தில் மேலும் சில புதிய ரயில்களை விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்."

இவ்வாறு அந்த கடிதத்தில் கலாநிதி வீராசாமி எம்.பி. தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்