சென்னை கே.கே.நகர் அம்மா உணவகத்தை இடிக்க கூடாது -பொதுமக்கள் கோரிக்கை
‘சென்னை கே.கே.நகரில் உள்ள அம்மா உணவகத்தை இடிக்கக்கூடாது’ என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
சென்னை,
சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் உள்ள அம்மா உணவகத்தை, மழைநீர் வடிகால்வாய் பணிகளை காரணம் காட்டி இடித்து தள்ள உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதற்கு பொதுமக்கள் தெரிவித்த எதிர்ப்பின் காரணமாக, இந்த உணவகம் மாற்று இடத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் குடிநீர் உள்பட எந்தவித வசதியும் இல்லாத ஒரு குறுகிய இடத்தில் அம்மா உணவகம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதனால் இந்த அம்மா உணவகத்தை தேடி வருவோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். நாடி வருவோர் சிரமப்பட கூடாது என்பதற்காக அக்கம்பக்கத்து வீடுகளில் குடிநீரை வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு அம்மா உணவக ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் உணவு சமைக்க வசதியில்லாத நிலையில் மாற்று இடத்தில் உணவு சமைத்து அங்கிருந்து நடையாய் சென்று உணவுகளை எடுத்து இங்கே வந்து வினியோகம் செய்கிறார்கள்.
பொதுமக்கள் வேண்டுகோள்
மேலும் அங்கு முறையான கழிவுநீர் செல்லும் வசதி ஏற்படுத்தப்படாத நிலையில் சாப்பிட்டு கை கழுவும் நீர் கூட வாசலில் தேங்கி நிற்கும் அளவுக்கு நிலைமை மோசம் அடைந்திருக்கிறது. இதனால் சாப்பிட வருவோருக்கும் தர்ம சங்கடம் ஏற்படுகிறது.
ஏதோ கடமைக்கு செயல்படுவது போல அம்மா உணவகம் இருப்பதாக ஏழை மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
என்ன சொல்வதென்றே தெரியாத நிலையில் ஊழியர்களும் தவிக்கிறார்கள். இதையெல்லாம் சரிகட்ட தினந்தோறும் ஆயிரக்கணக்கானோரின் பசியாறும் மையமாக செயல்பட்ட ராஜமன்னார் சாலை அம்மா உணவகம் முன்பு போலவே செயல்பட அனுமதியளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
இடிக்க கூடாது
ராஜமன்னார் சாலையில் உள்ள அம்மா உணவகத்தை மழைநீர் வடிகால்வாய் பணிகளை காரணம் காட்டி இடிக்க இருக்கிறார்கள். இந்த உணவகத்தை இடிக்காமலேயே மழைநீர் வடிகால்வாய் பணிகளை மேற்கொள்ளலாம். அதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன. இல்லையெனில் அருகேயுள்ள குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான காலியிடத்தில் கூட அம்மா உணவகத்தை ஏற்படுத்தலாம். ஆனால் எங்கோ ஒரு மூலையில் அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு குறுகிய இடத்தில் மாற்று இடம் ஒதுக்கி இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
ஒரே நேரத்தில் 100 பேர் சாப்பிடக்கூடிய இந்த இடம் எங்கே? 15 பேர் கூட சாப்பிட முடியாத அந்த புதிய இடம் எங்கே? இதையெல்லாம் அதிகாரிகள் எண்ணிப்பார்க்காதது ஏன்? மக்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட அம்மா உணவகங்களுக்கு விரைவில் மூடுவிழா ஏற்பட்டு விடுமோ? என்ற சந்தேகத்தையே இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுத்துகிறது.
எனவே ஏழை மக்கள் நலன் கருதி, முன்புபோலவே ராஜமன்னார் சாலை அம்மா உணவகம் செயல்பட அரசு அனுமதி அளிக்க வேண்டும். அதை இடிக்க கூடாது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.