சென்னை ஐகோர்ட்டுதான் முன்னோடியாக திகழ்கிறது: சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி பேச்சு

சமரச தீர்வு மைய செயல்பாடுகளில் நாட்டிலேயே சென்னை ஐகோர்ட்டுதான் முன்னோடியாக திகழ்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறினார்.;

Update: 2023-09-08 20:54 GMT

சென்னை.

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு சமரச தீர்வு மையத்துக்கான புதிய கட்டிடம் திறப்பு விழா மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரியில் 120 தாலுகாக்களில் அமைக்கப்பட்டுள்ள சமரச துணை மையங்களின் தொடக்க விழா நேற்று ஐகோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா தலைமை தாங்கினார். சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு, இந்த கட்டிடத்தை திறந்து வைத்தும், துணை மையங்களை தொடங்கி வைத்தார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வாய்ப்பு

அப்போது பேசிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், "பொதுவாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண சட்ட ரீதியாக வழிமுறைகள் இருந்தாலும் அவற்றை விதிகளுக்கு உட்பட்டே மேற்கொள்ள வேண்டியுள்ளது. நீதிமன்றங்களில் வழக்காடிகள் தங்களின் விருப்பத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ஆனால் சமரச தீர்வு மையங்களில் அது சாத்தியம். சமரச தீர்வு என்பது சிறந்த நடைமுறை. இ்ங்கு குடும்ப பிரச்சினைகள் மட்டுமின்றி வணிக ரீதியிலான பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உடனடி தீர்வு காணப்படுகிறது. சமரச தீர்வு மைய செயல்பாடுகளில் நாட்டிலேயே சென்னை ஐகோர்ட்டுதான் முன்னோடியாக திகழ்கிறது" என்று கூறினார்.

5 கோடி வழக்கு

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது:-

இந்த புதிய கட்டிடம் நீதிமன்றம் என்ற உணர்வை நிச்சயமாக பொதுமக்களுக்கு ஏற்படுத்தாது. மாறாக அவர்களின் குறைகளைக் களையும் இடமாக திகழும்.

தற்போதுள்ள சூழலில் 5 கோடி வழக்குகளுக்கு நீதிமன்றங்களில் உடனடி தீர்வு காண்பது இயலாது. ஆனால், நாடு முழுவதும் சமரச தீர்வு மூலமாக இதுவரை இந்த வழக்குகளுக்கும் தீர்வு கண்டுள்ளோம். இதில் சிவில் வழக்குகள் மட்டுமின்றி கிரிமினல் வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. பொதுவாக நீதிமன்றங்கள் ரோல்ஸ் ராய்ஸ் காரைப் போன்றது. சமரச மையங்கள் எரிபொருள் சிக்கனம் கொண்ட மாருதி காரைப் போன்றது என்பதால் பொதுமக்கள் மத்தியில் சமரச மையங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பேசி தீர்க்கலாம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா பேசும்போது, "தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட சமரச தீர்வு மையங்கள் தற்போது நாடு முழுவதும் ஆலமரம் போல வேரூன்றியுள்ளது. சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பலன் அளிக்கும் விதமாக இந்த புதிய மையங்களின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும். அதற்கேற்ப சென்னை ஐகோர்ட்டில் உள்ள தமி்ழ்நாடு சமரச தீர்வு மையமும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடைகோடி தாலுகாவில் உள்ள துணை மையங்களும் அதிநவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளின் மூலமாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு வரும் பெண்களுக்கு தனி அறை, முதியவர்களுக்கு தனி அறை, பாலூட்ட தாய்மார்களுக்கு தனி அறை என நீதிமன்றம் என்ற உணர்வு இல்லாமல், இருதரப்பும் உணர்வுப்பூர்வமாக சமரசமாக வழக்குகளை பேசித்தீர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்றார்.

அடித்தளம்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும், தமிழ்நாடு சமரச தீர்வு மையக் கமிட்டியின் தலைவரும், ஐகோர்ட்டு மூத்த நீதிபதியுமான ஆர்.மகாதேவன் வரவேற்று பேசினார். அவர் பேசுகையில், "இருதரப்பில் ஏற்படும் பிரச்சினைகளை சமரசமாகவும் பேசி தீர்க்கலாம் என்ற நோக்கில் இந்திய நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக 2005-ம் ஆண்டு சமரச தீர்வு மையத்துக்கு அடித்தளம் அமைத்ததே தமிழ்நாடுதான். அந்த அடித்தளம்தான் தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 120 தாலுகாக்களில் துணை மையங்களாக உருவெடுத்துள்ளது" என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் ஐகோர்ட்டு நீதிபதி கே.கிருஷ்ணகுமார் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜெ.நிஷா பானு, ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, டி.பரத சக்கரவர்த்தி உள்ளிட்ட நீதிபதிகள், அரசு தரப்பு வக்கீல்கள், மூத்த வக்கீல்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்