ஜொ்மனியில் இருந்து வந்தபோது சென்னை விமானம் துருக்கியில் தரை இறங்கியதால் 3 மணி நேரம் தாமதம் - பயணிகள் அவதி

ஜொ்மனியில் இருந்து வந்தபோது சென்னை விமானம் துருக்கியில் தரை இறங்கியதால் 3 மணி நேரம் தாமதமானது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Update: 2022-07-05 08:26 GMT

ஜெர்மன் நாட்டில் உள்ள பிராங்க்பர்ட் நகரில் இருந்து 292 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு விமானம் வந்து கொண்டு இருந்தது. நள்ளிரவு 11.50 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்து சேர வேண்டிய அந்த விமானம், வழியில் திடீரென துருக்கி நாட்டில் உள்ள அங்காரா விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டு அவசரமாக தரை இறங்கியது. மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை 2.55 மணிக்கு 3 மணி நேரம் தாமதமாக சென்னை வந்து தரை இறங்கியது. இந்த விமானம் வழக்கமாக நள்ளிரவு 11.50 மணிக்கு சென்னைக்கு வந்து விட்டு அதிகாலை 1.59 மணிக்கு பிராங்க்பர்ட் நகருக்கு புறப்பட்டு செல்லும். இந்த விமானத்தில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் அமெரிக்கா, கனடா, லண்டன் போன்ற நாடுகளுக்கு செல்லும் பயணிகளாக இருப்பாா்கள்.

அதேபோல் நேற்று அதிகாலை 1.50 மணிக்கு பிராங்க்பர்ட் புறப்பட இருந்த விமானத்தில் 308 போ் பயணிக்க இருந்தனா். விமானம் வராததால் எப்போது புறப்படும் என்று தெரியாமல் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர். அதிகாலை 2.55 மணிக்கு விமானம் அங்காராவில் இருந்து சென்னைக்கு வந்த பின் 308 பயணிகளுடன் தாமதமாக காலை 5.45 மணிக்கு பிராங்க்பா்ட் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். சென்னைக்கு வந்து கொண்டு இருந்த இந்த விமானம் திடீரென துருக்கி நாட்டில் அவசரமாக தரை இறங்கியது ஏன்? என கேட்டதற்கு அதிகாரிகள் பதில் தெரிவிக்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்