சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே 12 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரெயில் சேவை ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே 12 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.
பராமரிப்பு பணி
சென்னையில் மின்சார ரெயில் சேவையை நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, மூர்மார்கெட்-அரக்கோணம், மூர்மார்கெட்-கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை ஆகிய 3 வழித்தடங்களில் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது. கடற்கரை-வேளச்சேரி இடையிலான பறக்கும் ரெயில் சேவையில் 4-வது வழித்தட பணி காரணமாக சிந்தாதிரிப்பேட்டை-வேளச்சேரி வரையில் மட்டுமே தற்போது ரெயில் சேவை இயக்கப்படுகிறது.
இதில், பயணிகளின் நலன் கருதி தண்டவாள பராமரிப்பு பணிகள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பராமரிப்பு பணி காரணமாக 12 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரெயில் சேவையை ரத்து செய்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
12 நாட்கள்
சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (19-ந்தேதி), நாளை (20-ந்தேதி) மற்றும் 25-ந்தேதி முதல் நவம்பர் 3-ந்தேதி வரையிலும் இரவு நேர மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இரவு 11.59 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் 19-ந்தேதி (இன்று), 20-ந்தேதி மற்றும் 25-ந்தேதி முதல் நவம்பர் 3-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இரவு 11.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் அதே தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, வரும் 29-ந்தேதி தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 11.35 மணிக்கு புறப்படும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.