சென்னை: ரூ.90-க்கு பிரியாணி கேட்டு ஓட்டல் சப்ளையர் மீது தாக்குதல் - ஒருவர் கைது

பெரியமேட்டில் ரூ.90-க்கு பிரியாணி கேட்டு ஓட்டல் சப்ளையரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-03 15:27 GMT

சென்னை,

சென்னை பெரியமேடு மாட்டுகார வீரபத்திரன் தெருவில் உள்ள ஒரு பிரியாணி கடைக்கு வந்த நபர் ரூ.90-க்கு சிக்கன் பிரியாணி பார்சல் கேட்டுள்ளார். அதற்கு அந்த கடையில் சப்ளையராக வேலை பார்த்து வரும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த முகமது உஸ்மான்(வயது 50) பிரியாணி பார்சல் ரூ.100 என்றும், ரூ.90-க்கு தர முடியாது என்று மறுத்துள்ளார். பின்னர் அந்த நபரை கடையை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முகமது உஸ்மான் மீது தாக்க தொடங்கினர். இதில் அவருக்கு மூக்கு, இடது கை கட்டை விரல், வயிற்றுப்பகுதி ஆகிய இடங்களில் ரத்தகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபர் தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து முகமது உஸ்மான் பெரியமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் ஓட்டல் சப்ளையர் முகமது உஸ்மானை தாக்கியது பெரியமேடு முதல் தெருவை சேர்ந்த விக்னேஷ்(வயது 27) என்பது தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது பெரியமேடு போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்