சென்னை: பள்ளிக்கரணையில் 3,000 போதை மாத்திரை, ஊசிகள் பறிமுதல் - 5 வாலிபர்கள் கைது
சென்னை அடுத்த பள்ளிக்கரணையில் 3,000 போதை மாத்திரை, ஊசிகளை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.;
சென்னை,
தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை அடுத்த பள்ளிக்கரணையில் போதை மாத்திரை, ஊசிகள் பயன்படுத்தப்படுவதாகவும், விற்பனை செய்யப்படுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் சரவணன் தலைமையிலான குழு அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது பள்ளிக்கரணையில் உள்ள தனியார் கல்லூரி எதிரில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இளைஞர்கள் நின்றிருந்ததை கவனித்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் போலீசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்தருந்துள்ளது. பிடிப்பட்ட 5 வாலிபர்களும் போதை மாத்திரை விற்பனை செய்ததும், ஆன்லைனில் கொள்முதல் செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும் வாலிபர்கள் 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3,000 போதை மாத்திரை, போதை ஊசிகள், 5 செல்போன்கள், இரண்டு இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கரணையில் 3,000 போதை மாத்திரை, ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.