செண்பகவல்லி அணையை சீரமைக்க வேண்டும்

செண்பகவல்லி அணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் சின்னத்துரை எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.;

Update:2023-10-09 00:52 IST

விருதுநகரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் சின்னத்துரை எம்.எல்.ஏ. பேட்டி அளித்தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது:-

மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தினை முடக்க நினைக்கும் நிலையில் நடப்பு நிதியாண்டில் ரூ.63 ஆயிரம் கோடி தான் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.17 ஆயிரம் கோடி நிதி பாக்கியுள்ளது. கடந்த 2 மாதங்களாக 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு முறையாக சம்பள பட்டுவாடா செய்யப்படவில்லை. எனவே மத்திய அரசு இத்திட்டத்திற்காக முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படும் நிலையில் காவிரியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியும், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின் படியும், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாத நிலையில் மத்திய அரசு பார்வையாளராக உள்ளது. எனவே மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தென் மாவட்டங்கள் பயன்படும் வகையில் காவிரி- வைகை- குண்டாறு- வைப்பாறு நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த 45 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டத்தில் சேதமடைந்துள்ள செண்பகவல்லி அணையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மாவட்டத்தில் அர்ஜுனா நதி, வைப்பாறு கவுசிகமா நதி, குண்டாறு ஆகிய நதிகள் காட்டாறு என்று சொல்லப்பட்டாலும் கருவேலமர ஆக்கிரமிப்புகள் உள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நதிகளில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்.

இ்வ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக விருதுநகர் எம்.வி.ஆர். நினைவுரங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். இந்த கருத்தரங்கில் மாவட்ட தலைவர் பூங்கோதை, செயலாளர் சுந்தரபாண்டியன், மாநில துணைத்தலைவர் பழனிசாமி, நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்