செல்லியாண்டி அம்மன் கோவில் தேரோட்டம்
கச்சுப்பள்ளியில் செல்லியாண்டி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.;
எடப்பாடி:-
கொங்கணாபுரத்தை அடுத்த கச்சுப்பள்ளி பகுதியில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் பெருமான் மற்றும் செல்லியாண்டி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளருமான டி.எம்.செல்வகணபதி, வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தையொட்டி, அப்பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த நிலக்கடலை, தேங்காய், வாழை, கரும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான விளை பொருட்களை செல்லியாண்டி அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்தனர். தேரோட்டத்தில், தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் சம்பத்குமார், ஒன்றிய செயலாளர் பரமசிவம் மற்றும் செல்லாண்டியம்மன் கோவில் நிர்வாகக்குழுவினர் உள்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.