ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சோதனை

ஓசூர், சூளகிரி பகுதியில் ஓட்டல்களில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சோதனை செய்து 24 கிலோ இறைச்சி பறிமுதல் செய்தனர்.

Update: 2023-10-08 18:47 GMT

ஓசூர்

ஓட்டல்களில் ஆய்வு

ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜசேகர் (சூளகிரி), முத்துக்குமார் (தளி) ஆகியோர் ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது ஓசூரில் இயங்கிவரும் சில அசைவ உணவகங்களில் தயாரித்து விற்கப்படாத 6 கிலோ தந்தூரி சிக்கன் மற்றும் 18 கிலோ மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி ஆகியவற்றை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும் சில உணவகங்களில் சந்தேகத்திற்குட்பட்ட சிக்கன் ரைஸ் மற்றும் மட்டன் பிரியாணி போன்ற உணவு பொருட்களில் இருந்து உணவு மாதிரிகளாக சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஓசூரில் உள்ள சில பேக்கரி மற்றும் ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட 4 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்தனர்.

அபராதம்

அதேபோல், கிருஷ்ணகிரி பைபாஸ் ரோடு மற்றும் பாகலூர் ரோடு பகுதிகளில் உள்ள சில டீக்கடைகளில் ஆய்வின்போது 3 கிலோ கலப்பட டீத்தூள் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் கெட்டுப்போன தந்தூரி சிக்கன், மட்டன், பிரியானி மற்றும் கலப்பட டீத்தூள் விற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் வழங்கினர். மேலும் 4 கடைக்காரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.8 ஆயிரம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்