மதுரையில் லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை- பரபரப்பு தகவல்கள்

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன;

Update:2023-10-11 01:56 IST


கள்ளக்காதல் ஜோடி

ராமநாதபுரம் மாவட்டம் கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 38). இவர் அவரது மனைவியை பிரிந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்தார். அதே கடையில் மதுரை ஒத்தக்கடையை அடுத்த அருமனூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சனி (25) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.அந்த கடையில் அவர்கள் இருவரும் ஒரே தளத்தில் கடந்த 6 மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட நட்பு காதலானது. பின்னர் இருவரும் பல்வேறு இடங்களில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள லாட்ஜில் அடிக்கடி அறை எடுத்தும் தங்கி வந்துள்ளனர்.

விஷம் குடித்து தற்கொலை

இருவரும் நேற்று முன்தினம் மாலை அங்குள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர்களது அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் மேலாளர், புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிளவர் சீலா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கதவை உடைத்து பார்த்த போது அங்கு கார்த்திகேயனும், ரஞ்சனியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் இருவரின் உடல்களையும் பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், இருவரின் கள்ளக்காதல் விவகாரம் ரஞ்சனியின் வீட்டுக்கு தெரிய வந்ததால் எதிர்ப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்