கோத்தகிரி: கள்ளக்காதல் ஜோடி ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை - 40 நாட்களுக்குப் பின் உடல்கள் மீட்பு
கோத்தகிரி அருகே கள்ளக்காதல் ஜோடியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.;
நீலகிரி:
கோத்தகிரி அருகே கள்ளக்காதல் ஜோடியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள வெள்ளரி கம்பை இருளர் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னன். இவரது மகன் சரவணன் (வயது 25). குன்னூர் வனத்துறையில் வாட்சராக பணி புரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இந்திராணி என்கிற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். சரவணனும், குன்னூர் அருகே உள்ள ஆடர்லி சேம்புக்கரை கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினருமான ராஜேஷ் என்பவரது மனைவி சுமதியும் (வயது 25) கடந்த 6 மாதங்களாக நெருங்கி பழகி வந்துள்ளனர். சுமதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் அவர்கள் 2 பேருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் தனிமையில சந்தித்து உல்லாசமாக இருந்து உள்ளனர். இந்தநிலையில் இந்த கள்ளக்காதலை இரு வீட்டைச் சேர்ந்தவர்களும் கண்டித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தெரிந்ததும் சரவணனின் மனைவி இந்திராணி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி குடிபோதையில் சரவணன், சுமதியை அழைத்துக் கொண்டு வெள்ளரிக் கம்பையில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது தாயார் செல்லம்மாள் தனது மகனிடம் இருவருக்கும் குடும்பம் உள்ளது. இந்தத் தொடர்பை விட்டு விட வேண்டும் என புத்திமதி கூறியதுடன், இல்லாவிட்டால் சுமதியின் கணவரிடம் சொல்லி விடுவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் மாயமானார்கள். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் உறவினர்கள் தேடி வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை வெள்ளரிகம்பை கிராமத்தில் மாடு மேய்க்கச் சென்றவர்கள் அங்குள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் பெண் ஒருவரும், தலையின்றி கீழே விழுந்து கிடந்த நிலையில் ஆண் ஒருவரும் அழுகிய நிலையில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது குறித்த கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தசாமி, குன்னூர் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்- இன்ஸ்பெக்டர்கள் சேகர், மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது.
விசாரணையில் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சரவணன் மற்றும் சுமதி என்பது தெரிய வந்தது. அவர்கள் எழுதி வைத்த கடிதத்தில் தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும், 2 பேரின் உடல்களையும் ஒரே இடத்தில் புதைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். இது குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.