விநாயகர் கோவில்களில் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
திருக்கோவிலூர், சங்கராபுரம், தியாகதுருகம் பகுதி விநாயகர் கோவில்களில் நடைபெற்ற சதுர்த்தி வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.;
திருக்கோவிலூர்
இரட்டை விநாயகர் கோவில்
திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலையில் உள்ள அருள்மிகு இரட்டை விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக காலை 8 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து சாமிக்கு மகா அபிஷேகம், 108 சங்காபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
அதேபோல் கீழையூர் பெரிய யானை கணபதி கோவிலில் காலை முதல் மாலை வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு மூஷிக வாகனத்தில் வீதி உலாவும் நடைபெற்றது. இது தவிர திருக்கோவிலூரை சுற்றியுள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில் சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது. மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறிய விநாகர் சிலைகளை வைத்து தேங்காய், பழம், சுண்டல், அவல், பொரி, கொழுக்கட்டை ஆகியவற்றை படைத்து வழிபட்டனர்.
போலீ்ஸ் பாதுகாப்பு
திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் 101 இடங்களிலும், திருப்பாலபந்தல் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 64 இடங்களிலும், மணலூர்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 58 இடங்களிலும் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது. வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விழா நடைபெறும் இடங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு யாரேனும் அரசு வகுத்துள்ள விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை மீறினால் அல்லது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட காரணமாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் எச்சரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் பகுதி
அதேபோல் சங்கராபுரம் கடைவீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சந்தனகாப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலிக்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம் நடைபெற்று, பிரமாண்ட விநாயகர் மண் சிலை வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல் சங்கராபுரம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தியாகதுருகம் பகுதி
தியாகதுருகத்தில் பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணியசாமி கோவில் வளாகத்தில் வடக்கு முகம் பார்த்தவாறு உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 21 பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது செல்வ விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர். இதேபோல் நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரர கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், ஆரிய வைசிய பிள்ளையார், விஸ்வகர்மா விநாயகர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.