சதுரகிரி மலைப்பாதையை சீரமைக்க வேண்டும்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் உள்ளது.

Update: 2022-09-21 20:06 GMT

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் உள்ளது. திசைக்கு 4 கிரிகள் (மலைகள்) வீதம் 16 கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் இம்மலை சதுரகிரி என பெயர் பெற்றது.

9 பேர் பலி

மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர் ஆகும். மலை அடிவாரமான தாணிப்பறையில் இருந்து மலைப்பகுதியில் கோவில் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு தினசரி பக்தர்கள் சென்று வந்தனர். இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மே 17-ந் தேதி நடைபெற்ற அமாவாசை வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய மலை ஏறி சென்றனர்.

அப்போது திடீரென பெய்த கனமழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், மலைப்பகுதியில் இருந்து இறங்க முடியாமலும் சிக்கி தவித்தனர். அப்போது ஆற்றினை கடந்து வர முயன்ற 9 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

அடிப்படை வசதி

அதன்பிறகு பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அத்துடன் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகியவற்றின் போது 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலை ஏறி சென்று தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ேகாவிலுக்கு தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் இருந்து எலும்பு ஓடை, மாங்கனி ஓடை, சங்கிலிபாறை ஓடை, பிளாவடி கருப்பசாமி கோவில் ஓடை, சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு முன்புள்ள சிறிய ஓடை ஆகியவற்றை கடந்து தான் ேகாவிலுக்கு செல்ல வேண்டும். இந்த ஓடைகளில் எந்தவொரு பாலம் இல்லை. ஆதலால் பாலம், சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மலை மேம்பாட்டுக்காகவும், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், மலையில் சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணியினை செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பாலம் இல்லை

அதன்பின்னர் தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் இருந்து சங்கிலிபாறை வரை குறிப்பிட்ட தொலைவிற்கு மட்டுமே சாலை அமைக்கப்பட்டது. அதற்கு மேல் மலைக்கோவில் வரை சாலை அமைக்கப்படவில்லை. அதேபோல தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் இருந்து பிளாவடி கருப்பசாமி கோவில் வரை உள்ள நீர்வரத்து ஓடைகளில் எந்த ஒரு பாலங்களும் கட்டப்படவில்லை.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சின்னபடிவட்டி, நாவல் ஊற்று, கோணத்தளவாசல், வழுக்கு பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரும்பு கைப்பிடிகள் மற்றும் பல்வேறு பணிகள் செய்வதற்கும், மாங்கனி ஓடை, எலும்பு ஓடை, சங்கிலி பாறை ஓடை, பிளாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட இடங்களில் இரும்பு பாலங்கள் அமைப்பதற்கு ஆய்வு செய்யப்பட்டு அதற்குண்டான மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை. இதனால் இன்றும் பக்தர்கள் ஆபத்தான முறையில் ஓடைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. சாலை அமைக்கப்படாததால் கரடு, முரடான பாதைகளில் செல்ல வேண்டி உள்ளது. எனவே பாலம், சாலை, மின்விளக்கு, தண்ணீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயிர்காக்கும் சிகிச்சை

மலைப்பகுதிகளில் செல்லும் அபாயமான பகுதிகளில் இரும்பு கைப்பிடிகள், படிகள் அமைக்க வேண்டும். மலைப்பாதையில் மின் விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 500 மீட்டர் இடைவெளியில் பாதுகாப்பான மண்டபங்கள் அமைக்கவும், மலையில் தகவல் தொடர்பு வசதிக்கு செல்போன் கோபுரங்கள் அமைக்கவும், உயிர் காக்கும் சிகிச்சைகளுக்கு மருத்துவமனை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்