மழையின்றி கருகிய நெற்பயிரில் ஆடுகளை மேயவிட்ட விவசாயிகள்
கனமழை கொட்டும் இந்த டிசம்பர் மாதத்தில், எதிர்பார்த்த மழை இல்லாததால் நெற்பயிர்கள் கருகின. அதனை ஆடுகளை மேயவிட்டு அழித்த வேதனையான நிகழ்வு நடந்துள்ளது.;
இளையான்குடி,
கனமழை கொட்டும் இந்த டிசம்பர் மாதத்தில், எதிர்பார்த்த மழை இல்லாததால் நெற்பயிர்கள் கருகின. அதனை ஆடுகளை மேயவிட்டு அழித்த வேதனையான நிகழ்வு நடந்துள்ளது.
ஏமாற்றிய மழை
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் வடகிழக்கு பருவ மழைக்காலம். கொட்டும் கன மழையால் விவசாய பயிர்கள் சேதம் அடைந்ததாகத்தான் இந்த மாதங்களில் செய்திகள் வரும்.
ஆனால், இந்த ஆண்டு மழை மறைவு பகுதியாக சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்கள் மாறி உள்ளன.
அதன் விளைவு, மழைக்காலத்திலும் பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்திருக்கிறார்கள். அப்படி கருகிய நெற்பயிர்களை காப்பாற்ற முடியாது என ஆடுகளை மேயவிட்டு அழித்த வேதனை தரும் நிகழ்வும் நடந்திருக்கிறது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
மேய்ச்சல் நிலமாக்கினர்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பருவமழையையொட்டி விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்தபடி போதிய மழை இப்பகுதியில் பெய்யவில்லை. இதன் காரணமாக பயிரிட்ட நெல் பயிர்கள் அனைத்தும் கடும் வெயில் காரணமாகவும், தண்ணீர் இல்லாததாலும் கருகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும், சிலர் கிணற்று பாசனம் மூலம் பயிர்களை காப்பாற்ற பாடுபட்டு வருகின்றனர்.
இளையான்குடி அருேக உள்ள அரியாண்டிபுரம் கிராமத்தில் கருகிய நெற்பயிர்களை செம்மறி ஆடுகளை மேயவிட்டு மேய்ச்சல் நிலங்களாக மாற்றி உள்ளனர்.
இழப்பீட்டு தொகை
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
பருவம் தவறி மழை பெய்துள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்கள் பருவமழைக்காலம் என்பதால், போதிய மழை பெய்யும். அதுவே அறுவடை வரை தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கும் என நம்பி சாகுபடி செய்திருந்தோம்.
நெற்பயிர் வளர வேண்டிய நேரத்தில் மழை இல்லாமல் போனதால் கருக தொடங்கிவிட்டன. மேலும் தண்ணீர் பாய்ச்ச வசதி இயலாத நிலங்களில் செம்மறி ஆடுகளை கொண்டு நெற்பயிர்களை அழித்து வருகின்றனர். இது எங்களுக்கு மிகுந்த வேதனைைய ஏற்படுத்தி வருகிறது. பெரும்பாலான விவசாயிகள் கடன் வாங்கித்தான் சாகுபடி செய்திருந்தார்கள்.
மேலும் சில விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது மாற்று பயிர் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காகவும் ஆடுகளை மேயவிட்டுள்ளனர். நெல் விவசாயம் செய்து பாதிப்படைந்த விவசாயிகளின் நிலங்களை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய இழப்பீட்டு தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் அதிகாரிகள் மாற்றுப்பயிர் செய்ய தக்க ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.