கோவில் திருவிழாவில் தேர் சாய்ந்ததால் பரபரப்பு

விருத்தாசலத்தில் கோவில் திருவிழாவில் பள்ளத்தில் சக்கரம் சிக்கியதால் தேர் சாய்ந்தது.;

Update: 2023-06-08 18:45 GMT

விருத்தாசலம், 

பிரம்மோற்சவம்

விருத்தாசலம் பெரியார் நகரில் ருக்மணி சத்தியபாமா சமேத ராஜகோபால சாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் கடந்த 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வீதி உலா நடைபெற்று வந்தது. மேலும் கடந்த 6-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும், 7-ந் தேதி வேடு பறி உற்சவமும் நடந்தது.

பள்ளத்தில் சிக்கியது

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலையில் ருக்மணி, சத்தியபாமா, சமேத ராஜகோபாலசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் தேர் போன்று அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சாமி எழுந்தருளினார். தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தேரோட்டம் தொடங்கியது.

சிறிது நேரத்தில் தேரின் சக்கரம் ஒன்று எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் சிக்கியது. இதனால் தேர் ஒரு புறமாக சாய்ந்தது. இதைபார்த்த பக்தர்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.

இதில் நாச்சியார்பேட்டையை சேர்ந்த வினோத்குமார் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

மீண்டும் தேரோட்டம்

இதற்கிடையே சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு பக்தர்கள் அனைவரும் சேர்ந்து தேரை நிமிர்த்தினர். இதைத் தொடர்ந்து மீண்டும் தேரோட்டம் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பள்ளத்தில் சக்கரம் சிக்கி தேர் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்