பெருமாள் கோவில்களில் தேரோட்டம்

பெருமாள் கோவில்களில் தேரோட்டம் நடந்தது.

Update: 2023-06-02 20:27 GMT

துறையூர்:

தேரோட்டம்

துறையூரில் உள்ள தென்திருப்பதி என்று பக்தர்களால் போற்றப்படுகின்ற பெருமாள் மலையில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 25-ந் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதையொட்டி அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் மலை மீதுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதைத்தொடர்ந்து கடந்த 31-ந் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. மேலும் இந்திர விமானம் மற்றும் குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி சர்வ அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார். துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள், கோவிந்தா... கோவிந்தா... என பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் ஸ்டாலின்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட அறங்காவலர் குழு நியமன தலைவர் மெடிக்கல்முரளி, துறையூர் ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன் தாஸ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்கள் வடம் பிடித்தனர்

இதேபோல் புத்தானத்தத்தை அடுத்த கருமலையில் மருங்காபுரி ஜமீனுக்கு சொந்தமான கரிகிரி வரதராஜ பெருமாள் கோவிலின் திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காலையில் பல்லக்கிலும், இரவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்திலும் பெருமாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 31-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் பெருமாளை எழுந்தருள செய்து, ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் தேரோடும் வீதிகளின் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ரெங்ககிருஷ்ண குமார விஜய பூச்சய நாயக்கர் தலைமையில் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்