கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் தேரோட்டம் இன்று நடக்கிறது
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது.;
திருப்பாதிரிப்புலியூர்,
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தது. கடந்த 29-ந்தேதி நாச்சியார் திருக்கோலம், ஊஞ்சல் சேவை, 30-ந்தேதி யானை வாகனம், நேற்று முன்தினம் சூர்ணாபிஷேகம், 108 கலச திருமஞ்சனமும், நேற்று வேடுபறி உற்சவமும் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்ட வாகன தேரில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி எழுந்தருளுகிறார்கள். தொடர்ந்து பக்தர்கள் தேரை இழுத்து செல்வார்கள். இதை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளார்கள்.
அதன்பிறகு கோபுர வாசலில் தீர்த்தவாரி நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) திருமஞ்சனமும், மாலையில் துவாதச ஆராதனம், புஷ்பயாக உற்சவம், துவஜா அவரோஹணம், பூர்ணாகுதி நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 6-ந்தேதி (வியாழக்கிழமை) காலையில் திருமஞ்சனம், இரவு 7 மணிக்கு விடையாற்றி உற்சவத்துடன் 12 நாட்கள் விழா முடிவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.