பங்குனி உத்திர திருவிழா:குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவிலில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-03 18:45 GMT

காரைக்குடி,

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.

பங்குனி உத்திர திருநாள்

காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இந்த விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு வெள்ளிக்கேடகத்தில் சண்முகநாதபெருமான், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

கடந்த 30-ந்தேதி மாலையில் சுவாமிக்கும் வள்ளிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மறுநாள் இரவு தங்க ரதத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 5.30 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சுவாமி தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேரோட்டம்

தொடர்ந்து சுவாமிக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். அதன் பின்னர் மாலை சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகள் வழியாக வந்து மாலை 6 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

இன்று பங்குனி உத்திர நாளை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்தல், பால்குடம், அலகு குத்துதல், அக்னி காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், பகல் 11.15 மணியளவில் உத்திர தீர்த்த விழா நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மயிலாடும் பாறையில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவையொட்டி பல்வேறு இடங்களில் அன்னதானம் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்