துர்க்கையம்மன் கோவில் தேரோட்டம்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் துர்க்கையம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள துர்க்கையம்மன் கோவிலில் லட்சார்ச்சனை தேர்த்திருவிழா கடந்த 8-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம், வழிபாடுகள் மற்றும் உபகார பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு லட்சார்ச்சனை, சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் பூர்த்தி ஹோமம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான நேற்று காலை துர்க்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் மேளதாளங்கள் முழங்க துர்க்கையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. முதலில் திரளான பெண்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் மாலை மின்விளக்கு அலங்காரத்துடன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.