2 துறைகள் மீது குற்றச்சாட்டு: 'லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளிப்போம்' கே.அண்ணாமலை பேட்டி

தமிழக அரசின் 2 துறைகள் மீது தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Update: 2022-06-05 23:53 GMT

சென்னை,

தமிழக அரசு கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் தனியார் நிறுவனத்தின் ஊட்டச்சத்து பவுடருக்கு பதிலாக அரசு நிறுவனமான ஆவின் ஊட்டச்சத்து பவுடரை சேர்ப்பது என்று இதற்காக நியமிக்கப்பட்ட குழு முதலில் முடிவு எடுத்தது. ஆனால் திடீரென்று ஆவின் பொருளை நீக்கிவிட்டு மறுபடியும் தனியார் ஊட்டச்சத்து பவுடர் சேர்க்கப்பட்டது.

இந்த பவுடர் ஆவினை விட 60 சதவீதம் விலை அதிகம் ஆகும். இதன் மூலம் அரசுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்படுகிறது. இந்த பெட்டகத்தில் 200 மி.லி. இரும்புசத்து டானிக் (மருந்து) வழங்கப்படுகிறது. இதை மாநில அரசின் மருந்து கட்டுப்பாட்டுக்கழகம் ரூ.42-க்கு வாங்குகிறது. இதையே இந்த நிறுவனம் ரூ.224-க்கு கொடுக்கிறது. இதன் மூலம் அரசுக்கு ரூ.32 கோடி இழப்பு ஏற்படுகிறது. ஆக மொத்தம் 2 பொருட்களில் மட்டும் ரூ.77 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.

லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அளிப்போம்

மிக மோசமான பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிய நிறுவனம் தான் இந்த ஊட்டச்சத்து பெட்டகத்தையும் சப்ளை செய்கிறது. எனவே இந்த டெண்டரை திறக்க கூடாது. உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மீண்டும் இந்த பெட்டகத்தில் ஆவின் ஊட்டச்சத்து பொருளை சேர்க்க வேண்டும்

இந்த விவகாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது நாங்கள் குற்றம் சுமத்த விரும்பவில்லை. காரணம், 2 தனிநபர்கள் வெளியே இருந்து செய்தது. ஆனால் அமைச்சர் எப்படி இந்த 2 பேரை டெண்டர் நிலைப்பாட்டில் அனுமதிக்கலாம் என்பதுதான் எங்களுடைய கேள்வி. மேலும் வீட்டு வசதி வாரியத் துறை திட்ட வரைவு வழங்குவதில் சி.எம்.டி.ஏ. மீதும் குற்றம் சுமத்துகிறோம். எனவே இந்த 2 துறைகள் மீதான புகாரை, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பா.ஜ.க. வக்கீல் அணியினர் 2 நாட்களில் வழங்குவார்கள். இதில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சென்னை ஐகோர்ட்டை நாடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. கூட்டணி

பின்னர் நிருபர்களுக்கு கேட்ட கேள்விகளுக்கு கே.அண்ணாமலை அளித்த பதில் வருமாறு:-

குடியுரிமை திருத்தம் சட்டம், வேளாண்மை சட்டம் போன்ற முக்கிய சட்டங்களுக்கு ஆதரவு அளித்து எங்களுடன் நின்ற பெரிய கட்சி அ.தி.மு.க., தற்போது பா.ஜ.க. குறித்து பொன்னையன், செல்லூர் ராஜூ ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துகள் என்னை பொறுத்தவரையில் அவர்களுடைய தனிப்பட்ட கருத்தாகத்தான் பார்க்கிறேன். அதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

அ.தி.மு.க.வை அழித்துதான் வளர வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் பா.ஜ.க.வுக்கு கிடையாது. தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு பெரிய இடம் இருக்கிறது. அதே நேரத்தில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒரே கூட்டணியில் இருப்போம். எந்த குழப்பமும் இல்லை.

மாநில தலைமை அறிவுறுத்தல் இல்லாமல் பா.ஜ.க.வினர் யாரும் தங்களுடைய தனிப்பட்ட கருத்தை அ.தி.மு.க. மீது வைக்க கூடாது. பா.ஜ.க.-அ.தி.மு.க.வுக்கும் இடையே எந்தவித சண்டையோ, சச்சரவோ, குழப்பமோ கிடையாது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் யாரேனும் கருத்து சொன்னால் அவர்களை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கேட்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்