பொள்ளாச்சி நகரில் சாலை விரிவாக்க திட்டத்தில் மாற்றம்
பொள்ளாச்சி நகரில் சாலை விரிவாக்க திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, சாலையை அகலப்படுத்தாமல் சாக்கடை கால்வாய் கட்டப்படுகிறது.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகரில் சாலை விரிவாக்க திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, சாலையை அகலப்படுத்தாமல் சாக்கடை கால்வாய் கட்டப்படுகிறது.
சாலை விரிவாக்கம்
பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக தனியாரிடம் இருந்து 3,254 சதுர மீட்டரும், அரசு நிலம் 6,836 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ரூ.33 கோடியே 57 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. இதை தவிர சாலை பணிக்கு ரூ.34 கோடியே 61 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் தொடங்கி 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முழுமையாக முடிக்கவில்லை. இதற்கிடையில் மெட்ராஸ் ரோடு சந்திப்பில் ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் தபால் நிலையம் பகுதியில் சாலையை அகலப்படுத்தாமல் சாக்கடை கால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
சாக்கடை கால்வாய்
பொள்ளாச்சி நகரில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிலம் கையகப்படுத்த வேண்டிய பணிகளால் ரவுண்டானா அமைக்கும் பணிகள் முழுமையாக முடியவில்லை. தாலுகா போலீஸ் நிலையத்தில் இருந்து தபால் நிலையம் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையில் திட்டப்படி தபால் நிலையத்தின் ஏ.டி.எம்., சுற்றுச்சுவர் ஆகியவற்றை அகற்றி விட்டு சாலையை அகலப்படுத்த வேண்டும்.
ஆனால் தபால் நிலைய இடத்தில் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளது. இதற்கிடையில் தபால் நிலையம் முன் கழிவுநீர் தேங்குவதால் பொதுமக்கள் சிரமப்படுவதாக புகார் வந்தது. இதன் காரணமாக தற்காலிகமாக மாற்று ஏற்பாடாக சாக்கடை கால்வாய் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. வழக்கு முடிந்து சாதகமாக தீர்ப்பு வரும்பட்சத்தில் மீண்டும் பழைய திட்டப்படி சாலை விரிவாக்கம் செய்யப்படும். அப்போது வாகனங்கள் செல்லும் வகையில் தற்போது சாக்கடை கால்வாய் வலுவாக கட்டப்படுகிறது. இதனால் மீண்டும் சாலை விரிவாக்கம் செய்யும் போது சாக்கடை கால்வாய் கட்ட வேண்டிய இருக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.