சந்திரயான்-3 வெற்றி: தேசத்தின் ஒற்றுமையை பிரதிபலித்து இருக்கிறது - செல்லூர் ராஜூ

சந்திரயான்-3 வெற்றி தேசத்தின் ஒற்றுமையை பிரதிபலித்து இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-25 08:43 GMT

மதுரை,

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது. இதுவரை நிலவின் தென்பகுதியில் யாரும் செல்லாத நிலையில் நமது சந்திரயான்-3 முதன் முறையாக அங்கு கால்தடம் பதித்து இருப்பது உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் நிலையை உயர்த்தி உள்ளன.

நமது நாடு பல மொழி, பல இனம், பல மதம் என இருந்தாலும் தேசம் என்று வரும் போது அனைவரும் ஒன்றிணைந்து விடுவார்கள். அதற்கு எடுத்துகாட்டாக, சந்திரயான் நிலவில் தரையிறங்கும் காட்சியை கோடான கோடி மக்கள் நேற்று பார்த்து மகிழ்ந்தனர். சந்திராயன் வெற்றியை அனைவரும் கொண்டாடினர். இந்த வெற்றி, நமது தேசத்தின் ஒற்றுமையை உலக்கு பிரதிபலித்து இருக்கிறது. இந்த ஒற்றுமை நமக்கு மண்ணிலும், விண்ணிலும் நிச்சயம் வெற்றியை பெற்று தரும்.

எடப்பாடி பழனிசாமி சந்திரயான் வெற்றிக்கு பாடுபட்டவர்களை வாழ்த்தி இருக்கிறார். அவரது வழியில் மதுரை மக்கள் சார்பாக நானும் இந்த வெற்றிக்கு காரணமான விஞ்ஞானிகளை பாராட்டுகிறேன். இந்த வெற்றிக்கு பின்னால் ஒரு தமிழரான திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் இருப்பது, நமக்கெல்லாம் பெருமையான விஷயம். எனவே அவரையும், அவரது குடும்பத்தினரையும் இந்த தருணத்தில் பாராட்டுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த திட்டத்திற்கு ஊக்கம் தந்த பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் நன்றி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்