சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கியது:தூத்துக்குடியில் மாணவிகள் உற்சாக கொண்டாட்டம்

சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கியதை நேரலையில் பார்த்த தூத்துக்குடி மாணவிகள் உற்சாகமாக கொண்டாடினர்.

Update: 2023-08-23 18:45 GMT

சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதை முன்னிட்டு தூத்துக்குடியில் மாணவிகள் உற்சாகமாக கொண்டாடினர்.

சந்திரயான்-3

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பினர். அந்த விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என்றும், இதனை நேரடியாக ஒளிபரப்பவும் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி நேற்று மாலை 5.27 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

மகிழ்ச்சி

இதனை தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிடும் வகையில் டி.வி.க்களில் ஒளிபரப்பப்பட்டன. இதனால் மாணவ, மாணவிகள் தரையிறங்கும் காட்சி விழி மூடாமல் பார்த்துக் கொண்டே இருந்தனர். சரியாக அறிவிக்கப்பட்டபடி 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் கால்பதித்தது. உடனடியாக மாணவ, மாணவிகள் உற்சாகமாக குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் பல வண்ண தாள்களாக வெடித்து சிதறக்கூடிய பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்