தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: 26 மாவட்ட கலெக்டர்களுக்கு அவசர உத்தரவு
தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.;
சென்னை,
தமிழ்நாட்டில் கோடை மழை பரவலாக பெய்யத் தொடங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், இன்று (வியாழக்கிழமை) முதல் 19-ந்தேதி வரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன், அதாவது மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக் கூடும் என ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், வடமாவட்டங்கள் சில இடங்களில் இன்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை) கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தென்காசி, விருதுநகர், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளையும் கனமழை பெய்யக் கூடும்.
நாளை மறுதினம் (சனிக்கிழமை) தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
அதற்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான தேனி, தென்காசி, கோவை, நீலகிரி மற்றும் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.மிக கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்சு எச்சரிக்கையையும், கன மழை பெய்யக்கூடிய இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையையும் ஆய்வு மையம் விடுத்து இருக்கிறது.
இதன் அடிப்படையில், தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மழைக்கால முன்னெச்சரிக்கை எடுக்கும்படி ஆட்சியர்களை அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பத்தூர், கோயம்புத்தூர், நீலகிரி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கரூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய 26 மாவட்டங்களின்கலெக்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், சென்னை வானிலை ஆய்வு மையம், கனமற்றும் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, கலெக்டர்கள் நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்றி, பேரிடரை கையாள வேண்டும். மாவட்ட நிர்வாகத்தை முழுமையாக செயல்பட செய்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கனமழையால் ஏற்படும் பிரச்சினைகளை கையாள வேண்டும். மேலும், ஏதேனும் நிகழ்வுகள் இருந்தால் அது குறித்து உடனடியாக வருவாய் நிர்வாக ஆணையரின் கவனத்துக்கு கலெக்டர்கள் கொண்டு வர வேண்டும்" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.