தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 20-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு

தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் வருகிற 20- ந் தேதி (செவ்வாய்க்கிழமை) 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Update: 2022-12-16 23:50 GMT

சென்னை,

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய போது, இந்த ஆண்டு பருவமழை இயல்பையொட்டி பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி, தற்போது வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட 3 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. இதற்கு கடந்த வாரம் தமிழக பகுதிகளில் கடந்த மாண்டஸ் புயலும் ஒரு காரணம் ஆகும்.

இதன் காரணமாகத் தான் தமிழகத்தில் இயல்பை தாண்டி தற்போது மழை பெய்திருக்கிறது. பருவமழை முடிய இன்னும் 2 வார காலம் முழுமையாக உள்ளது. இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக இலங்கை மற்றும் அதனையொட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் கடக்க வாய்ப்பு இருக்கிறது.

அனேக இடங்களில்...

இந்த நிகழ்வு காரணமாக தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு மழைக்கான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டாலும் தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி, இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நாளைமறுதினம் (திங்கட்கிழமை) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

8 மாவட்டங்களில் கனமழை

அதன் தொடர்ச்சியாக வருகிற 20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 20-ந்தேதி வரை மணிக்கு 35 கி.மீ. முதல் 55 கி.மீ. வரையிலான வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்