சாம்பியன் கோப்பை தேனிக்கு நாளை வருகை
ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பை நாளை தேனிக்கு வருகிறது.;
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்தியா, ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி வருகின்ற ஆகஸ்டு 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் இந்த போட்டி நடக்கிறது. இந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சர்வதேச விளையாட்டு போட்டி தொடர்பாக வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக இந்த கோப்பையை சுற்றுப்பயணம் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டது.
இந்த சுற்றுப்பயணத்தை சென்னையில் கடந்த 20-ந்தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) இந்த கோப்பை தேனிக்கு வருகிறது. தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.
இந்த கோப்பைக்கு தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.