மாற்றுச்சான்றிதழ் கொடுக்க மறுக்கும் தனியார் கல்லூரிமாற்றுச்சான்றிதழ் கொடுக்க மறுக்கும் தனியார் கல்லூரி
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், மங்கலம் சின்னப்புத்தூரை சேர்ந்த சங்கீதா என்ற மாணவி அளித்த மனுவில், 'நான் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர். மங்கலம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 முடித்து, கோவை மாவட்டம் காரமடையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆதிதிராவிட மாணவிக்கு இலவச கல்வி என்று கூறியதை நம்பி அந்த கல்லூரியில் கடந்த 2022-23-ம் ஆண்டு சேர்ந்தேன். 40 நாட்கள் கல்லூரிக்கு சென்றேன். இந்தநிலையில் என்னை கல்விக்கட்டணம் கட்ட கல்லூரி நிர்வாகம் வற்புறுத்துகிறது. எனக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். எனது தந்தை மங்கலம் ஊராட்சியில் தற்காலிக துப்புரவு தொழிலாளியாக உள்ளார்.
தனியார் கல்லூரியில் கட்டணம் செலுத்தி படிக்க முடியாத நிலையில் நான் உள்ளேன். தனியார் கல்லூரியில் இருந்து எனது மாற்றுச்சான்றிதழை கேட்டபோது அவர்கள் கொடுக்க மறுக்கிறார்கள். கல்விக்கட்டணம் கட்ட வற்புறுத்துகிறார்கள். எனவே மாற்றுச்சான்றிதழை பெற்றுக்கொடுத்து, மேற்படிப்பு படிக்க எனக்கு வழிவகை செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.