சிறப்பாக செயல்பட்ட அலுவலர்களுக்கு சான்றிதழ்
ஆதார் எண் இணைக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.;
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவம் 6 பி-ல் வாக்காளர்கள் ஆதார் எண்ணை பெற்று இணையவழியில் கருடா செயலி மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,68,725 வாக்காளர்களில் இதுவரை 5,10,662 வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதியில் சிறப்பாக பணியாற்றிய 4 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, தேர்தல் தாசில்தார் சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி 20 பேருக்கு சான்றிதழ் வழங்கி பேசுகையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காத வாக்காளர்கள் உடனடியாக இணைய வழி அல்லது செயலிகள் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறினார்.